நாம் தமிழர்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வெற்றிக்குமரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு இருப்பதாகசக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.
அவ்வறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வெற்றிக்குமரனும் நீண்ட அறிக்கை ஒன்றினை தனது x பக்கத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தன்னை சீமான் கட்சியை விட்டு நீக்க முடியாது என்றும் அதில் குறிப்பிடப்படுள்ளது.வெற்றிக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ் வருமாறு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், “2002 ஆம் ஆண்டு ஓர் அதிகாலை மதுரை தொடர்வண்டி நிலையத்தில் உங்களை சந்தித்தேன். அன்று முதல் உங்களின் வசீகர பேச்சாலும் உங்கள் அன்பினாலும் ஆக்கிரமிக்கப்பட்டு ஒரு தம்பியாக, ஒரு தோழனாக தொடர்ந்தேன். அன்றிலிருந்து எப்பொழுது நீங்கள் மதுரை வந்தாலும் தமுஎச, திராவிட இயக்க கூட்டங்களுக்கு ஊர் ஊராக அழைத்துச் செல்வேன். 2009 ஆம் ஆண்டு ஈழப் போர் உச்சமாக நடந்து கொண்டிருந்த வேலையில் இயக்குனர் சங்கம் சார்பாக காங்கிரஸ் மற்றும் திமுகவை வீழ்த்த தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த நீங்கள் மதுரை வந்தபோது நடந்த சந்திப்பில் “ஏன் நாம் ஒரு இயக்கமாக மாறக்கூடாது” என உங்களிடம் கேட்க நானும் அந்த சிந்தனையில்தான் இருக்கிறேன். சென்னைக்கு வாங்க தம்பி முடிவு செய்வோம்” எனக்கூறி அழைத்து இயக்குனர் அப்பா மணிவண்ணன் அவர்கள் வீட்டில் நடந்த அந்தக் கூட்டத்தில் முடிவானதுதான் நாம் தமிழர் என்ற கட்சி என்பதை நன்கு நீங்கள் அறிவீர்கள். ஒரு பொறியாளராக சிறப்பாக தொழில் செய்து கொண்டு செல்வ செழிப்பாக இயங்கிக் கொண்டிருந்த நான் அன்று முதல் அரசியல் களத்தில் இறங்கினேன். அதுவரை வழக்கு, சிறை ஏதும் அறியாத நான் இவிகேஎஸ். இளங்கோவன் அவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு எறிந்து வெடித்ததாக கைது செய்யப்பட்டேன். இதுதான் நாம் தமிழர் கட்சியின் முதல் வழக்கு. வசதியாக வாழ்ந்து வந்த நான் திடீரென வெடிகுண்டு வழக்கில் கைது என்றவுடன் எனது குடும்பம் நிலைகுலைந்தது.
நாம் தமிழர் கட்சியை தீவிரவாத இயக்கமாகவே பார்க்கப்பட்ட நேரம் அது. சிறையில் இருந்த என்னை ஐந்து முறை வந்து பார்த்தீர்கள். என் தம்பி இன்ஜினியர். எனக்காக சிறை சென்றவன் என எல்லோரிடமும் சொல்லி பெருமைப்பட்டீர்கள். அந்த சிறை வாழ்வு தான் என்னை அரசியலில் பயமறியாது எதற்கும் துணிந்து இயங்க வைத்தது. மதுரையில் நாம் தமிழர் என்ற பெயரில் இயக்கமாக ஜூலை 18. 2009 அருத்தெறிவோம் வாரீர் என கூட்டம் நடத்தியது தொடங்கி 2010 ஆம் ஆண்டு மே 18 அரசியல் கட்சியாக மாற்றி மதுரையில் மாநாடு என்று என்னுடைய பயணம் முழுதாய் உங்களுக்கானதாக மாறியது. தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் என் படங்கள் வருவதை பார்த்தவர்கள் நான் பெரிய ஆள் என்று நம்பினார்கள். அதனால் விளைந்த பயன் எனக்கு கட்டிடம் கட்டுவதற்கான வாய்ப்பு குறைந்து போனது. சேமிப்பாக பணமும், சொத்துக்களாக நிலங்களும் வைத்திருந்த அனைத்தும் கட்சிக்காக ஓடிய நாட்களில் காணாமல் போனது, தொழில் செழிப்பாக இருந்த காலங்களில் நடத்தப்பட்ட கட்சி நிகழ்வில் அனைத்தும் யோசிக்காமல் செலவு செய்தேன்.
காரணம், கட்சியின் மேல் கொண்ட காதலும் தங்களின் மீது இருந்த பாசமும். இப்பொழுது செலவுத்தொகையை பகிர தம்பிமார்கள் நிறைய வந்து விட்டார்கள். அப்போது எவர் இருந்தார் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். காலம் கடந்தது கட்சி வளர்ந்தது தமிழகம் முழுவதும் சுற்றிலும் இடைவிடாது பயணித்தோம். எத்தனை இடர்கள், எத்தனை சோதனைகள், எத்தனை வழக்குகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டோம். காலம் செல்லச் செல்ல உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழ ஆரம்பித்தது. மேடையில் பேசுவதற்கு முன்பு கூட காரில் பேசி காண்பித்து தம்பிகளின் விருப்பத்தை பொறுத்து பிறகு மேடையில் முழங்குவீர்கள். எங்களது கருத்துக்களை வலிந்து கேட்காவிட்டாலும் நாங்கள் சொல்கின்ற கருத்துக்களை உள்வாங்குவீர்கள். சிலவற்றை எடுத்தும் கொள்வீர்கள். ஆனால் இப்பொழுது நான் சொல்வதைக் கேட்டால் இரு. இல்லையென்றால் வெளியேறு என்கிறீர்கள். தம்பியாக இருந்த நான் தம்பியாகவே இருந்து விட்டேன். அண்ணனாக இருந்த நீங்கள் தம்பியை மறந்த தலைவராக மாறிவிட்டீர்கள்.
இந்த நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு என்னை கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி விட்டதாக ஒரு கடிதத்தாள் சமூக வலைத்தளங்களில் கண்டேன். அது உண்மையா என தெரியவில்லை.
உண்மை என்றால் என்ன காரணத்திற்காக என்னை நீக்கினீர்கள்? நான் செய்த தவறு என்ன? வெளிப்படையாக கூற முடியாத தவறு என்றாலும் என்னை ஏன் அழைத்து விசாரிக்கவில்லை? நான் தவறு செய்திருந்தால் கண்டிக்கவும், தண்டிக்கவும் உரிமை உள்ள நீங்கள் ஏன் கடந்த ஆறு மாத காலமாக என் அழைப்பை கூட ஏற்க மறுத்து தொடர்பை தடை செய்தீர்கள்? யாரோ ஒருவர் உங்களிடத்தில் என்னைப் பற்றி கூறியிருந்தாலும் எப்படி உங்களால் நம்ப முடிந்தது 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழகிய உறவாடிய என்னை ஏன் புரிந்து கொள்ளவில்லை? தவறான ஒருவன் இத்தனை ஆண்டு காலத்தில் வெளிப்பட்டிருக்க மாட்டானா? நான் மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்க்கிறேன்.
என் நினைவுக்கு எட்டிய வரையில் ஒரு சிறு தவறு கூட செய்யவில்லை. உங்களின் மீது இருந்த அதீத அக்கறையின் காரணமாக தற்பொழுது, உங்களின் தோள் மீது ஏறி அமர்ந்திருக்கும் ஒருவனிடம் அவனை என் சொந்த தம்பியாக நினைத்து உங்களைப் பற்றி வருந்தி புலம்பி இருக்கிறேன். அதைத் தவிர வேற எந்த தவறும் செய்யவில்லை. என்னை நீக்கியதாக வெளியிட்டு இருக்கிற கடிதத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை நான் மீறியதாக குற்றம் சாட்டி நீக்கி இருக்கிறீர்கள். நான் மீறிய கட்சியின் கட்டுப்பாடு என்ன? ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் படி நீக்கி உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறீர்கள். ஒழுங்கு நடவடிக்கை குழுவில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்?
யார் யாரெல்லாம் அவர்கள்? இந்த குற்றச்சாட்டு குறித்து என்னிடம் விசாரித்தார்களா? என்னிடம் விசாரணை செய்து தங்களிடம் அறிக்கை ஏதும் சமர்ப்பித்தார்களா? அப்படி சமர்ப்பித்து இருந்தால் அதனுடைய விவரங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். ஒரு ஆயுள் காலம் என்பது 14 வருடம். என்னுடைய மிக முக்கியமான காலமான இந்த 14 வருடத்தை, ஒரு ஆயுள் காலத்தை உங்களுக்காகவும் இந்த கட்சியின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே செலவழித்து இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை நேரில் அழைத்துக் கூட பேசாமல் புறக்கணித்ததை அவமானமாக கருதுகிறேன்.
பதவிக்காகவும், இன்ன பிற சுகத்திற்காகவும் காத்துக் கிடப்பவன் தான் காலில் விழுந்து கிடப்பான். நான் நல்லவன். உண்மையானவன். நேர்மையானவன். நல்ல அரசியல் செய்ய வந்தவன். யாரிடத்திலும் எவரிடத்திலும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை. என்பதை உங்களுக்கு தெரிவித்து மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களிடத்தில் இருந்து பதில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இன்னொரு முக்கியமான விடயம்: எல்லாம் தெரிந்த உங்களுக்கு நமது கட்சியின் விதிகள் தெரியாதது கவலை அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி விதிமுறைகளின் படி என்னை நீக்குவதற்கு உங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதையும் மாநில பொறுப்பில் இருக்கும் என்னை பொதுக்குழுவை கூட்டித்தான் நீக்க முடியும் என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே நான் நாம் தமிழராகவே தொடர்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் வெளியிட்டு இருக்கும் இந்த அறிக்கையில், தலைவர் பிரபாகரன் அவர்களின் படமும் வெற்றிக்குமரனின் படம் மட்டுமே உள்ளது. வழக்கமாக நாம் தமிழர் கட்சியினரின் அறிக்கையில் பெரிதாக இருக்கும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் புகைப்படத்தை இதில் காண முடியவில்லை.