-
-
இலங்கையில் நீண்டகாலமாக நிலவிய உள்நாட்டுப் போரின் முடிவாக அமைந்த ‘இலங்கை இறுதிப் போர்’ சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் ஒளிப்படப் பெருநூலின் அறிமுக நிகழ்வு, சுவிஸ் நாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
-
சூரிச் நகரின் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள Gessnerallee 8, 8001 Zurich என்னும் முகவரியில் அமைந்திருக்கும் House of anti-racism மண்டபத்தில் 2022-11-12 அன்று பிற்பகல் இந்த நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தபடி 15.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி நூல் அறிமுக நிகழ்வை ஊடகரும் எழுத்தாளருமான சண் தவராஜா அவர்கள் நெறிப்படுத்தியதோடு தலைமையுரை நிகழ்த்தினார்.
சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, ‘Tears of Tamils: A long journey from the war zones of Sri Lanka’ என்னும் புனைவுசாராத் திரைப்படத்தின் (documentary film) குறுகிய பதிப்பு திரையிடப்பட்டது.
ஊடகரும் மனித உரிமைகள் சார் செயற்பாட்டாளருமான பாசண அபேவர்தன அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் அவர் நேரிற் கலந்துகொள்ள முடியாதிருந்த காரணத்தினால், காணொலி ஊடாக அவரது உரை நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து, நிகழ்விற் கலந்துகொண்ட பலருக்கும் ஒளிப்பட நூலின் பிரதிகளை அமரதாஸ் வழங்கினார்.
ஒளிப்படக் கலைஞர் ஜெயந்தன் நடராஜா அவர்களும் விஞ்ஞான ஆசிரியரும் கலை விமர்சகருமான தயாபரன் தம்பையா அவர்களும் எழுத்தாளரும் கலை விமர்சகருமான ரவீந்திரன் அவர்களும், மேற்படி ஒளிப்பட நூல் தொடர்பான கருத்துரைகளை நிகழ்த்தினர்.
எழுத்தாளர்கள், ஊடகர்கள், கலைஞர்கள், சமூக அரசியற் செயற்பாட்டாளர்கள், நூல் ஆர்வலர்கள், ஆவணக் காப்பாளர்கள் மற்றும் மேற்படி நூலின் ஒளிப்படங்களிற் தோன்றுபவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் மேற்படி நிகழ்விற் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அமரதாஸ் வழங்கிய நன்றியுரையின் பின்னர், 16.00 மணியளவில் ஒளிப்பட நூலின் அறிமுக நிகழ்வு சிறப்பாக நிறைவுபெற்றது.