2019ஆம் ஆண்டு மே4ஆம் தேதி பின்னிரவில் அரங்கேறியஅந்தப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம். கிராஞ்சியிலுள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று, 23 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவாளர்க்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 16 ஆண்டுச் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்தது.
அப்போது, பல்கலைக்கழக மாணவியாக இருந்த அப்பெண், சம்பவ நாளன்று சாங்கியிலுள்ள தமது கல்வி நிலைய வளாகத்திற்குத் திரும்பும் போது தவறான ரயிலில் ஏறிவிட்டார். கிராஞ்சி ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், பின்னர் பேருந்தில் ஏறி அங்கு செல்லத் திட்டமிட்டார்.
பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது கைப்பேசி வழியாக அவருக்கும் அவருடைய காதலர்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பேருந்து நிறுத்தத்தில் பலர் இருந்ததால், தனிமை நாடி அடுத்த பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லலாம் என முடிவுசெய்து அவர் நடக்கத் தொடங்கினார்.
ஆனால், சுற்றுப்புறத்தைக் கவனிக்காமலேயே 10-15 நிமிடங்களுக்கு நடந்துவிட்டார். அப்போது அவரை நெருங்கிய சின்னையா கார்த்திக் என்ற 26 வயது இந்திய ஆடவர், எதுவும் பிரச்சினையா என்று கேட்டார். அதற்கு, ஒரு பிரச்சினையும் இல்லை என்ற அப்பெண், தன்னைத் தனித்திருக்கவிட்டு விலகிச் செல்லுமாறு அவரிடம் சொன்னார்.
சிறிது நேரம் கழித்தே அவர் தன்னைப் பின்தொடர்வதை அப்பெண் உணர்ந்தார். அதுபற்றி அவர் தன் காதலனிடம் சொன்னார். அங்கிருந்து அகன்று, திறந்தவெளிக்குச் சென்று, டாக்சி பிடிக்க முயலுமாறு அப்பெண்ணின் காதலர் அவரை வலியுறுத்தினார். ஆனால், அருகில் திறந்தவெளியும் இல்லை, சாலையில் ஆள்நடமாட்டமும் இல்லை.அப்பெண் சாலையைக் கடக்க முயன்றபோது, சாலையின் நடுவில் அவரைப் பிடித்த கார்த்திக், அவரின் முகத்தில் குத்துவிட்டார்.
கைப்பேசி வழியே அப்பெண்ணின் அலறல்களை அவருடைய காதலர் கேட்க முடிந்தது. பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், அவர் அப்பெண்ணின் அறைத்தோழியை அழைத்து விவரம் சொல்ல, அத்தோழி காவல்துறையிடம் தகவல் தெரிவித்தார்.
இதனிடையே, கார்த்திக் அப்பெண்ணைப் பலமுறை தாக்க, அவர் அணிந்திருந்த கண்ணாடி கீழே விழுந்தது.பிறகு கார்த்திக் தன் கைகளால் அப்பெண்ணின் கழுத்தை இறுகப் பிடித்தபடி, அவரைக் காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்றார். அங்கு அவர் அப்பெண்ணை சீரழித்துவிட்டு, அங்கிருந்து அகன்றார்.அதன்பின் தன் கைப்பேசியைக் கண்டுபிடித்து, தன் காதலனிடம் நடந்தவற்றைச் சொன்னார் அப்பெண்.
அங்கிருந்து சாலைப் பகுதிக்குத் திரும்பிய அவர், பின்னிரவு 2.05 மணியளவில் காவல்துறை வரும்வரை, ஓரிடத்தில் அமர்ந்து அழுதவாறே இருந்தார்.அப்பகுதியிலிருந்த கண்காணிப்புப் படக்கருவிகளை ஆராய்ந்த காவல்துறை, கார்த்திக் அப்பெண்ணைக் கிட்டத்தட்ட 15 நிமிடங்களாகப் பின்தொடர்ந்ததைக் கண்டறிந்தனர். இரவு 1.32 மணியளவில் சிங்கப்பூர் டர்ஃப் கிளப் அவென்யூவில் சென்றபோது அவர்கள் மறைந்துபோயினர். பிறகு 1.48 மணியளவில் காட்டுப்பகுதியிலிருந்து ஆடை கலைந்த நிலையில் அப்பெண் வெளிப்பட்டது காணொளியில் தெரிந்தது.
அருகிலிருந்த தங்குவிடுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் விசாரித்த காவல்துறையினர், மறுநாள் மே 5ஆம் தேதி கார்த்திக்கைப் பிடித்தனர்.கார்த்திக் அப்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, முகத்தைக் காயப்படுத்தியதால், மருத்துவமனைக்குச் சென்றபோது, அப்பெண்ணின் காதலராலே முதலில் அவரை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்து நாலாண்டுகளாகிவிட்டபோதும் அதனால் அப்பெண் இன்னும் உணர்வு, மனம் சார்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.அவமானம் எனக் கருதி, தனக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து இன்னும் தன் குடும்பத்தாரிடம் எதுவும் கூறாத அப்பெண், அவ்வப்போது தனியாக அமர்ந்து அழுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.