2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு ஆலோசனை நடத்தி வரும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உட்பட 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில் அவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
பாஜகவை தோற்கடிக்கும் வகையில் இந்தியாவில் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதன்படி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் மொத்தம் 17 கட்சிகள் பங்கேற்றன. நேற்று துவங்கி இன்று வரை பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனையில் 24 கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் பாஜகவும் தனது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வியூகம் வகுக்க முடிவு செய்தது. மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டது. அதன்படி டெல்லியில் பாஜகவின் கூட்டணியில் உள்ள மற்றும் ஆதரவு கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மொத்தம் 38 கட்சிகள் வரை பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமை வகிக்க உள்ளார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜகவின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்யும் பணிகளை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, தாமாக, பாமக, புதிய தமிழகம் உள்பட மேலும் சில கட்சிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமாகா தலைவர் ஜிகே வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லி சென்றுள்ளனர். இருப்பினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா, பாரதிய சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தியின் இரு பிரிவுகள், ராஷ்டிரிய லோக் சமதா, நிஷாத், அப்னா தளம், ஜேஜேபி, சுகல்தேவ் உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.