கடிகார முற்களுக்கு-முன் செல்லும் கால்களே
பந்தயத்தில் உன்னுடன்
நித்தம் நித்தம் போட்டியே !
உன்னைப் பார்த்த பின்புதான்
நான் கண்ணுறங்கச் செல்வேன்
உன்முகத்தில் விழிக்கவே-என்றன்
கண்கள் உன்னைத் தேடுமே !
அவசர உலகினில்
ஆயுளை மறந்தேனே -உன்னை
மட்டும் இழக்கவில்லை
என் ஆயுளையும் இழந்தேனே !
நேரம்இல்லை.. நேரம்
இல்லை
ஓடும்பயணம் தூரம்இல்லை
இறுதியிலே அறிந்திடுவோம்-பூமியில்
நிற்பதற்கே நேரம் இல்லை !
மௌனமாக ஓடுகிறாய்…
மனத்துள்ளே பேசுகிறாய்
கத்தியின்றி இரத்தமின்றி
நித்தம்போர் புரிகிறாய்
மெல்லப்பேசுதே நாட்காட்டி
சொல்ல முடியாத ரகசியத்தை !
பிறப்புமுதல் இறப்புவரை
குறிசொல்லும் நாட்காட்டியே
உண்ணும் உணவும்
உலவும் பயணமும் – உன்
அனுமதியின் அப்புறமே
மௌனயுத்தம் களைந்த வண்ணம்
மெல்லப்பேசுதே நாட்காட்டி !
திருமதி . அபிராமி கவிதன்