தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர் பிரான்ஸில் வெளியிடப்பட்டது.

தாயகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அறப்பணிக்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் – பாரிஸ் புறநகர் (செவ்றோன்) Sevran நகரசபை மண்டபத்தில் நடாத்திய செந்தமிழ் மாலை உயிர்த்தெழும் வேர்கள் இயல், இசை, நாடக அரங்க நிகழ்ச்சியில் தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு கடந்த 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக வரவேற்பு விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. விளக்குகளை நகரசபை முதல்வர் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழக தலைவர் திரு கருணை ராஜன் ஆகியோர் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து பொதுச் சுடரினை தேசிய செயற்பாட்டாளர் திரு ஜெயா ஏற்றிவைத்தார். இதனைத்தொடர்ந்து மாவீரர்கள், மற்றும் பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து ஆரம்ப நிகழ்வாக தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர் அறிமுகம் இடம்பெற்றது. கவிஞர் அவர்களின் விடுதலைப் பயணக் குறிப்பு திரு. அரு இன்பன் அவர்களின் கவிதை வடிவிலான காட்சித்தொகுப்பு காணொளியாக திரையிடப்பட்டது. தொடர்ந்து வெளியீட்டு நிகழ்வை திரு அருள்மொழித்தேவன் தொகுத்து வழங்கினார்.
சிறப்பு மலரின் முதற் பிரதியை திரு சுஜீவன் (சுதன் ) வெளியிட்டுவைக்க நடன ஆசிரியர் திரு அருள்மோகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை சிறிபாரதி அச்சக உரிமையாளர் திரு சிறிதரன் வழங்க தமிழர் புனர்வாழ்வுக் கழக செயலாளர் திரு கோணேஸ்வரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமானது. நிகழ்வு இரு பகுதிகளாக நடைபெற்றது. முதற் பகுதி புலம்பெயர் தேசத்து வாழ்வியலை மையமாக வைத்தும் இரண்டாம் பகுதி எமது எதிர்காலத் தேவை என்ன என்பதாகவும் அமைந்திருந்தது.
நிகழ்வில் நடனம், நாட்டியம், அத்துடன் மூன்று நாடகங்கள் இதில் ஒன்று எமது வாழ்வியலைக் கூறும் பிரஞ்சு மொழி நாடகம். பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிகழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றி ஐம்பது வரையான எமது கலைஞர்கள் பங்குபெற்றிருந்தனர் என்பது கூடுதல் சிறப்பாகும்.
செந்தமிழ் மாலை உயிர்த்தெழும் வேர்கள் நிகழ்வில் தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர் அறிமுகம் செய்வதற்கு நேரம் ஒதுக்கித் தந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
« ஒற்றுமையே பலம் »
பவளவிழா நூல்
வெளியீட்டுக் குழு.






