வடக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருந்து கலவையாளர்களுக்கான ஆளணி பற்றாக்குறை பற்றி நேற்று பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்.
2016ம் ஆண்டிற்கு பின்னர் மருந்து கலவையாளர்களுக்கான நியமனங்கள் இதுவரை செய்யப்படவில்லை .
அதே நேரம் 2016ம் ஆண்டு வடக்கு மாகாணத்திற்கு நியமனம் பெற்று வந்த வேறு மாகாணங்களை சேர்ந்த பெரும்பாலானோர் தமது சொந்த மாகாணங்களுக்கு உரிய பதில்கள் இன்றி விடுவிக்கப்பட்டனர்.
இதனால் வட மாகாணத்தில் மருந்து கலவையாளர் ஆளணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 20 மருந்து கலவையாளர்களுகான …வெற்றிடம் காணப்படுகின்றது .
இதே போல் வட மாகாணம் முழுவதும் 40ற்கு மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவுகின்றன.
அதே நேரம் கடந்த வருடம் 22.03. 2024 திகதி அரச வர்த்தமானியில் மருந்து கலவையாளர்கள் சேவைக்கு ஆட் சேர்ப்பு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இதன் பிரகாரம் விண்ணப்பித்தவர்களில் தகுதியான பலர் கடந்த வருடம் யூன் மாதம் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர் .
நேர்முகப் பரீட்சை நடைபெற்று முடிவடைந்தும் இதுவரை தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பிலோ பயிற்சி நெறியை ஆரம்பிப்பது தொடர்பிலோ எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
ஆகவே அரசு இது தொடர்பில் கவனம் எடுத்து மருந்து கலவையாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியலை வெளியிட்டு அவர்களுக்கான பயிற்சி மற்றும் நியமனங்களை விரைவு படுத்த வேண்டும்.
அதுவரை வடக்கு மாகாணத்திற்கு வெளியேயான பதிலாள் இன்றிய இடமாற்றங்களை தயவு செய்து நிறுத்தி வையுங்கள்.
அத்துடன் தரம் 1 இனை சேர்ந்த மருந்து கலவையாளர்கள் தற்போதைய சேவை பிரமாணத்தின் படி 3வது வினைத்திறன்காண் தடைப் பரீட்சைக்கு தோற்ற வேண்டியுள்ளது.
அப் பரீட்சையில் சித்தியடைவதன் மூலமே அவர்கள் தொடர்ச்சியான சம்பள அதிகரிப்பை பெற முடியும். எனினும் இதுவரை ஒருமுறை கூட அப் பரீட்சை நடைபெறவில்லை. ஆனால் சேவை பிரமாண குறிப்பில் வருடத்தில் இருமுறை குறித்த பரீட்சை நடாத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்