“போரை நிறுத்தாவிட்டாலோ அல்லது மருத்துவ உபகரணங்களை வழங்காமல் இருந்தாலோ, அல் ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளும் இறந்துவிடுவார்கள். மருத்துவமனையே முற்றிலும் மயானமாக மாறிவிடும்” என்று மொகம்மது அபு முகாய்சேப் என்கிற மற்றொரு மருத்துவர் கவலையுடன் கூறியுள்ளார்
அல் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் மட்டும் 15,000-க்கும் அதிகமானோர் இருப்பதாக அந்த மருத்துவமனை இயக்குநர் முகமது அபு சலாமியா கூறினார். அவர் பேசுகையில், “காஸாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் குறி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் தலைப்புச் செய்தி. நாங்கள் அவர்களுக்கும் இந்த மொத்த உலகிற்கும் சொல்லிக் கொள்கிறோம். நாங்கள் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறோம். எங்களோடு ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவக் குழுவினர் உள்ளனர். நாங்கள் அவர்களுக்கு சேவை செய்வோமே தவிர, இங்கிருந்து செல்ல மாட்டோம். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தாலும் சரி, இங்கிருந்து செல்ல மாட்டோம்.” என்று உறுதிபடக் கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறக் கூடிய, போரில் காயமடைந்த முகமது ரய்ஹான் பேசிய போது, நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அரபு நாடுகள் எங்களோடு துணை நிற்க வேண்டும். நாங்கள் சோர்ந்துவிட்டோம். இறைவனின் கருணையால் மட்டுமே உயிர் வாழ்கிறோம். எங்களுக்காக கொஞ்சம் உணர்ந்து செயல்படுங்கள். நாங்களும் மனிதர்கள்தான்.” உருக்கமாக கூறினார்.
அல் ஷிஃபா மருத்துவமனையில் எரிவாயு தீர்ந்துவிட்டதாக ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இன்குபேட்டரில் இருந்த ஒரு குழந்தை இறந்துவிட்டதாகவும் மேலும் 45 குழந்தைகளின் நிலை கேள்விக் குறியாகி விட்ட தாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை வளாகங்களுக்கு கீழே சுரங்கம் அமைத்து ஹமாஸ் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இதனை ஹமாஸ் நிராகரித்துள்ளது. அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபாவுடனான தகவல் தொடர்பை நேற்றிரவு இழந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு கூறியது. மேலும் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து அந்த அமைப்பு “கடுமையான கவலைகளை” வெளிப்படுத்தியது. ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் முன்பு பிபிசியிடம் “எரிபொருள் பற்றாக்குறையால் அல்-ஷிஃபா மருத்துவமனை செயல்படவில்லை” என்று கூறினார்.
இன்று காலை, ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர், இருதய சிகிச்சை பிரிவு அழிக்கப்பட்டுவிட்டதாக மேலும் கூறினார்.
இஸ்ரேல் தனது படைகள் மருத்துவமனையைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பலமுறை மறுத்துள்ளது, ஆனால் அப்பகுதியில் ஹமாஸ் போராளிகளுடன் மோதல்களை ஒப்புக் கொண்டுள்ளது.
அல்-குத்ஸ் மருத்துவமனையில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகவும், இனி செயல்படவில்லை என்றும் இன்று காலை, பாலத்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டி (PRCS) கூறியது. மின்சாரம் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ ஊழியர்கள் இன்னும் முயற்சி செய்து வருவதாக அது கூறியது.
மருத்துவமனை இஸ்ரேலிய டாங்கிகளால் சூழப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அந்த அமைப்பு முன்பு கூறியிருந்தது. ஆனால் இஸ்ரேல் ராணுவமோ,”தற்போது நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கை” பற்றிய பிரத்யேகங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டது.
வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனையில் வான்வழித் தாக்குதலில் காயமடைந்த குழந்தைக்கு சிகிச்சையளிக்க முயற்சிக்கும் வீடியோவை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இன்று காலை பகிர்ந்துள்ளது. மருத்துவமனையின் மருத்துவர்களும் தங்களிடம் மின்சாரம் அல்லது ஆக்ஸிஜன் இருப்பு இல்லை என்றும், கைமுறையாக உயிர்ப்பிக்கும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது என்றும் கூறுகிறார்கள்.
ஒரு சில ஊழியர்கள் மற்றும் படுத்த படுக்கையான நோயாளிகள் தவிர மற்ற அனைவரும் இந்த குழந்தைகள் மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டதாக நேற்று, இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) என்ற மருத்துவ தொண்டு நிறுவனம், ரான்டிசி இஸ்ரேலிய டாங்கிகளால் சூழப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியது.
அல்ஸிபா மருத்துவமனையில் மூன்று மருத்துவதாதிமார் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு அருகில் விமானக்குண்டுவீச்சும் மோதல்களும் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தகவலை ஐநா வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையின் ஒக்சிசன் உற்பத்தி நிலையம் இருதயசத்திரசிகிச்சை பிரிவு தண்ணீர் தொட்டிகள் உட்பட முக்கியமான கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன என ஐநா தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் செயற்படுகின்றனர் என தெரிவிக்கப்படுவதை மருத்துவமனையின் சத்திரகிசிச்சை பிரிவின் தலைவர் வைத்தியர் மர்வன் அபு சடா பெரும் பொய் என நிராகரித்துள்ளார்.
நாங்கள் பொதுமக்கள் நான் மருத்துவர் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர் நோயாளிகள் உள்ளனர் இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர் வேறு எவரும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“போரை நிறுத்தாவிட்டாலோ அல்லது மருத்துவ உபகரணங்களை வழங்காமல் இருந்தாலோ, அல் ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளும் இறந்துவிடுவார்கள். மருத்துவமனையே முற்றிலும் மயானமாக மாறிவிடும்” என்று மொகம்மது அபு முகாய்சேப் என்கிற மற்றொரு மருத்துவர் கவலையுடன் கூறியுள்ளார்.