இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்தான பிரச்சனைகளை முக்கியமாக பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த உலக தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தே அதிகம் பேசப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் UPI பணப்பரிவர்த்தனை முறைகளை இலங்கையில் அறிமுகம் செய்து வைக்க ரணில் உடன்பட்டதோடு அதற்கு உண்டான உடன்படிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் இரு நாடுகளிடையே நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை மெல்ல, மெல்ல அதிலிருந்து மீண்டும் வரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.
கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட போது உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட தேவைகளுக்காக இலங்கைக்கு இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர்களை நிதி உதவியாக வழங்கியது.
இந்தியாவும் இலங்கையும் பெட்ரோலிய பகிர்வு, நாடுகளுக்கிடையிலான தரைப்பாலம் இணைப்பு தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பை அதிகரிப்பது குறித்தும் தெரிவித்த பிரதமர் மோடி, தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இலங்கையில் தமிழ் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினை எட்டுவது குறித்து உருப்படியான கருத்து பரிமாற்றம் எதுவும் இடம்பெறவில்லை என்ற செய்தி தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. ஆயினும் சிங்கள தலைவர் ஒருவர் இந்திய விஜயத்தினை தங்களது பொருளாதார முன்னேற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை தமிழ் மக்கள் பாடமாக கண்டுள்ளமையால் இவற்றினை கடந்து செல்ல கற்றுக்கொண்டுள்ளனர்.