தமிழனின் படகு தொழில் நுட்பமும், வல்லரசுகளின் படகு தொழில் நுட்பமும்.!!
சமீபத்தில் ஒரு சத்திர சிகிச்சை காரணமாக ஓய்வில் உள்ளமையால் எமது வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்கா ஒன்றில் சென்று சில மணிகள் அமர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். அப்படி செல்லும் போது ஸ்டீவ் என்னும் வெள்ளை இனத்தவர் ஒருவர் எனக்கு அறிமுகமாகி உள்ளார். அவருடன் உரையாடும் போது தான் அவர் ஒரு பிரிட்டிஸ் கடல்படையின் விசேட படைப் பிரிவில் இருந்து ஓய்வு பெற்றதை அறிந்தேன்.
அப்படியே எங்கள் பேச்சு எமது நாட்டு பிரச்சனையின் பக்கம் திரும்பியிருந்தது. அவரது பேச்சில் இருந்து அவரது கணிப்பின் படி புலிகளமைப்பு ஒரு கெரிலா பாணியிலான ஒரு விடுதலை அமைப்பு என்பதே. இதே கருத்தை தான் தமிழீழ மக்கள் தவிர்ந்த தமிழை பேசும் மக்கள் பலரும் கொண்டிருக்கின்றார்கள். ஏதோ ஒரு ஆற்றாமை என்னில் இழையோட எனது கைபேசி ஊடாக இணையத்தில் எமது ஒலிநாடாக்களை காட்டினேன். அதை பார்த்த பின் அவருக்கு பேரதிர்ச்சி.! அதை அவரது பேச்சே வெளிக்காட்டியது.
அவர் கடற்புலிகளின் சண்டைப் படகை காட்டி இவைகளை எங்கிருந்து வாங்கினார்கள்?? இதில் எந்த வகையான ஆயுதங்கள் பூட்டி உள்ளார்கள் போன்ற கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டார். நான் அது எங்களின் உள்ளூர் தயாரிப்பென்றும், அதில் அதி கூடிய சூட்டு ஆதரவாக 37mm கனோன், மற்றும் 14mm கனோன் போன்றவைகளும் பூட்டப் பட்டு அதன் உச்ச வேகம் 65 நொட்ஸ் (கடல் மைல்) என்று நான் கூறிய போது அவர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றிருந்தார். அதில் அவர் மிகவும் ஆச்சரிய பட்டது புலிகளின் சிறிய அதிரடிப்படைக்கான வேகப் படகை பார்த்த போது தான்.!
இந்த steel ரக படகு படகுகளை புலிகள் இருவகையாக தயாரித்தார்கள். ஒன்று கரும்புலித் தாக்குதலுக்கு ஏற்ற வகையிலும், மற்றையது கனரக ஆயுதங்கள் பூட்டிய (ஆயுதங்களுடன் கூடிய சிறிய படகுகளின் புகைப்படங்கள் என்னிடமில்லை) ஆறு பேர் கொண்ட ஒரு சிறிய அதிரடிப் படை பிரிவு போராளிகளை வேகமாக தரை வரை கொண்டு சென்று தரை இறக்க கூடிய வாறே வடிவமைத்து இருந்தார்கள். இதில் உள்ள சிறப்பம்சம் அதி வேகம், இலகுவில் எதிரியால் இலக்கு வைக்க முடியாமை, மற்றும் கருவியில் கண்காணிப்போருக்கு கண்ணில் மண்ணை தூவும் வல்லமை கொண்டவையாகும்.
இது போன்ற படகுகளை அமெரிக்க அதிரடிப்படையான “சீல்” படையினரே பாவிக்கின்றனர். அவர்கள் இந்த தொழில் நுட்பத்தை தமது நேச நாடுகளுக்கு கொடுத்து அவர்களும் உற்பத்தி செய்துள்ளார்கள். ஆசியாவில் புலிகளிடம் மட்டுமே, யாருடைய உதவியும் இல்லது தன்னிறைவாக உருவாக்க பட்டு எமது பாவனையில் இருந்தது.
சிலர் இதில் என்ன விசேசம் என்று யோசிக்கலாம்? சரியான அளவுகளில் கணிப்பிட்டு வடிவமைக்காது போனால் வேகம் கூடிய இயந்திரங்களை பூட்டும் போது அந்த படகு சமநிலை தவறி பிரண்டு கடலில் மூழ்கிப் போகும். பல ஆய்வுகளின் பின்பே இது போன்ற படகுகள் உருவாக்கப்படும்.
இதில் முக்கியமானது வேகம் கூடிய படகுகள் பலமில்லாது போனால் படகின் அடிப்பாகம் பிரிந்து கடலில் மூழ்கும். உலக நாடுகள் தமது சிறிய படகுகளை உறுதி கூடிய அலுமினியத்தாலும், பாரம் குறைந்த இரும்பு தகட்டினாலுமே உருவாக்க படுபவை. அதனால் தான் பாரம் கூடிய ஆயுதங்களுடன் அந்த படகுகள் வேகம் கூடிய போதும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
ஆனால் புலிகள் தமது சண்டைப் படகுகளை, சாதாரண மீன்பிடி படகு செய்வதற்கு பயன்படுத்த படும் கண்ணாடி இழையினால் (பைவர்கிளாஸ்) தான் வடிவமைத்திருந்தார்கள். அதில் பிரதாணமாக உலகின் சிறிய சண்டைப் படகுகளில் உள்ள ஆயுதங்களின் நிறையை விட மூன்று மடங்கு நிறை கூடிய ஆயுதங்களுடன் அதி கூடிய வேகம் (65நொட்ஸ்) கொண்ட சண்டைப் படகுகளுக்கு சொந்தக்காரர்கள் தமிழர்களே.
இதை நான் கூறிய போது அந்த வெள்ளை இனத்து முன்னால் அதிகாரி வியப்பின் உச்சத்துக்கே சென்றிருந்தார். அதன் பின் அவர் புலிகளை சிலாகிக்கத் தவறவில்லை. ஒரு பொருளை உற்பத்தி செய்யும் செலவை விட அதனை உருவாக்க செய்யும் ஆய்வுக்கே கூடிய பணம் விரையமாகும் என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள்.? அதனால் தான் இணையவெளி ஊடாக தொழில் நுட்பங்களை திருடும் நாடுகள் பட்டியல் நீழ்கிறது. இதில் முதன்மையானது சீனா என்பது யாவரும் அறிந்ததே? நோகாமல் நுங்கு தின்பதில் சீனர்கள் வல்லவர்கள்.
புலிகளின் வியக்க வைக்கும் உற்பத்திகள் பல இருந்தாலும் அதில் சண்டை படகுகளின் தொழில் நுட்பமே பிரதானமானது. இதில் ஸ்டீவ் போன்ற முன்னாள் அதிகாரிகளின் வியப்பு சிறு பகுதியே. தமிழரின் நுண்ணிய அறிவும், தொழில் நுட்பமும் தமிழர் பெருமை கொள்ளும் படி அவர்களை போய்ச் சேரவில்லையா ?? என்னை பொறுத்தவரை தமிழன் தலை நிமிரும் ஒரு பெருமையின் அடையாளமே எங்களின் தொழில் நுட்பம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது..!!
– ஈழத்து துரோணர்