கொழும்பில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பி குழுவிற்கான அணிகள் நிலையில் முதலிடத்தைப் பெற்ற இலங்கை ஏ அணி அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஓமான் ஏ அணிக்கு எதிரான பகல் இரவு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 217 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் அரை இறுதியில் விளையாடுவதை இலங்கை உறுதிசெய்துகொண்டது.
இலங்கை ஏ அணியினர் சகலதுறைகளிலும் பிரகாசித்ததன் பலனாக இந்த வெற்றி இலகுவாக கிடைத்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 259 ஓட்டங்களைக் குவித்தது.
பசிந்து சூரியபண்டார (60), சஹான் ஆராச்சிகே (48),லசித் குரூஸ்புள்ளே (43), அவிஷ்க பெர்னாண்டோ (25), அணித் தலைவர் துனித் வெல்லாலகே (21 ஆ.இ.), சாமிக்க கருணாரட்ன (20) ஆகியோர் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி இலங்கை ஏ அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.
குறிப்பாக பசிந்து சூரியபண்டாரவும் சஹான் ஆராச்சிகேயும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 110 ஓட்டங்கள் இலங்கை ஏ அணிக்கு பெரிதும் கைகொடுத்தது.
ஓமான் ஏ அணி பந்துவீச்சில் அணித் தலைவர் ஆக்கிப் இலியாஸ் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அயான் கான் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெய் ஓடேட்ரா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
260 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் ஏ அணி 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படு தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் காஷியப் ப்ராஜாபதி (18), சுராஜ் குமார் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
இலங்கை பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரமோத் மதுஷான் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு சமரக்கோன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சஹான் ஆராச்சிகே 2 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பங்களாதேஷ் வெற்றி
பி. சரவணமுத்து சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற ஏ குழுவுக்கான மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியை 21 ஓட்டங்களால் பங்களாதேஷ் ஏ அணி வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் அரை இறுதியில் விளையாட பங்களாதேஷ் தகுதிபெற்றது.
பி குழுவிலிருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் ஏற்கனவே அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்த்தில் மஹ்முதுல் ஹசன் ஜோய் 1100 ஓட்டங்களையும் ஸக்கிர் கான் 62 ஓட்டங்களையும் சௌம்யா சர்க்கார் 48 ஓட்டங்களையும் மஹெதி ஹசன் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மொஹம்மத் சலீம் 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ரியாஸ் ஹசன் 78 ஓட்டங்களையும் பாஹிர் ஷா ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களையும் நூர் அலி ஸத்ரான், அணித் தலைவர் ஷஹிதுல்லா ஆகிய இருவரும் தலா 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் ஷக்கிப் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரக்கிபுல் ஹசன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சௌம்யா சர்க்கார் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இன்றைய போட்டி முடிவுகளுக்கு அமைய பி குழுவில் அணிகள் நிலையில் இலங்கை முதலாம் இடத்தை அடைந்துள்ளது.
பங்களாதேஷ் 2ஆம் இடத்தையும் ஆப்கானிஸ்தான் 3ஆம் இடத்தையும் ஓமான் 4ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.