சூலை 17 (July 17) கிரிகோரியன் ஆண்டின் 198 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 199 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 167 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1203 – நான்காம் சிலுவைப் படைகள் கொன்ஸ்டண்டீனபோல் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். பைசண்டைன் பேரரசர் மூன்றாம் அலெக்சியஸ் ஆஞ்செலஸ் தலைநகரை விட்டுத் தப்பியோடினான்.
1755 – கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்கிலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.
1762 – உருசியாவின் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவனது மனைவி இரண்டாம் கேத்தரீன் அரசியானார்.
1771 – இங்கிலாந்தின் சாமுவேல் ஹேர்னுடன் பயணம் செய்த கனடாவின் சிப்பேவியன் பழங்குடிகளின் தலைவன் இனுவிட்டு மக்களின் ஒரு கூட்டத்தை நுனாவுட்டில் படுகொலை செய்தான்.
1791 – பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1815 – பிரான்சில் நெப்போலியன் பொனபார்ட் பிரித்தானியர்களிடம் சரணடைந்தான்.
1816 – பிரெஞ்சு பயணிகள் கப்பல் செனெகல்லுக்கு அருகில் மூழ்கியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.
1841 – முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது.
1856 – பென்சில்வேனியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1911 – யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக “யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது.
1918 – போல்ஷெவிக் கட்சியின் உத்தரவின் பேரில் ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாசும் அவனது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.
1918 – டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய “கர்பாத்தியா” என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் மூழ்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
1936 – ஸ்பானிய உள்நாட்டுப் போர்: ஸ்பெயினில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.
1944 – இரண்டாம் உலகப் போர்: கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: முதற் தடவையாக நேப்பாம் குண்டுகள் அமெரிக்காவினால் பிரான்ஸ் மீது போடப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் ஹாரி எஸ். ட்ரூமன், பிரித்தானியாவின் வின்ஸ்டன் சேர்ச்சில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உலகப்போர் தொடர்பான தமது கடைசி உச்சி மாநாட்டை ஜெர்மனியின் பொட்ஸ்டாம் நகரில் ஆரம்பித்தனர்.
1955 – கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டின் ஆரம்ப நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது.
1967 – நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் “சைனஸ் மெடை” என்ற இடத்தில் மோதியது.
1968 – ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அதிபர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது ஹசன் அல்-பாக்கர் அதிபரானார்.
1973 – ஆப்கானிஸ்தான் அரசர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.
1975 – அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.
1976 – கனடாவின் மொண்ட்ரியால் நகரில் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.
1976 – கிழக்குத் தீமோர் இந்தோனீசியாவுடன் இணைக்கப்பட்டது.
1979 – நிக்கராகுவா அதிபர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.
1981 – மிசூரியில் கன்சாஸ் நகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் கொல்லப்பட்டனர்.
1994 – பிரேசில் இத்தாலியை 3-2 என்ற பெனால்டி அடிப்படையில் வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தை வென்றது.
1996 – நியூ யோர்க்கில் லோங் தீவில் பாரிஸ் சென்றுகொண்டிருந்த போயிங் 747 TWA விமானம் வெடித்துச் சிதறியதில் 230 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – பப்புவா நியூ கினியில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 3,183 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1998 – பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.
2006 – இந்தோனீசியா, ஜாவாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2006 – இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் கொல்லப்பட்டனர்.
2014 – ஆம்ஸ்டர்டாம் இலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைனின் தோனெத்ஸ்க்கில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.