இலங்கை கொக்குத்தொடுவாய் பகுதி மனித புதைகுழி அகழ்வு பணியானது பல்வேறு எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்றும் ஐந்தாம் நாள் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் குறித்த அகழ்வு பணியில் இடம்பெற்ற தவறுகளை சுட்டிக்காட்டியதன் பின்னணியில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஊடகவியலாளர்கள் அகழ்வுப்பணி காலை ஆரம்பிக்கும் போதும், மதிய உணவு நேரம், மாலை நிறைவடையும் போதே அருகில் சென்று வீடியோ, புகைப்படங்கள் எடுத்து செய்தி சேகரிக்க முடியும் எனவும் ஏனைய நேரங்களில் செய்தி சேகரிக்க அனுமதி இல்லை எனவும் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ கட்டுப்பாடு விதித்துள்ளார்.
குறித்த அகழ்வு பணி பற்றிய வி்டயங்கள் ஏற்கனவே ஊடகங்களுக்கு மறைக்கப்பட்டு வரும் நிலையில் திடீரென இவ்வாறு ஊடகங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய கட்டுப்பாட்டில் குறித்த இடத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களை மூடி மறைப்பதற்கான செயற்பாடாகவே இருக்கின்றது என ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இனிவரும் அகழ்வு பணிகளில் உண்மையான விடயங்களை ஊடகங்களுக்கு வழங்குவார்களா? மக்களுக்கு உண்மையான விடயங்கள் தெரிய வருமா? அல்லது மூடி மறைக்கப்படுமா ? என்ற கேள்வியே மக்கள் மத்தியிலும், ஊடகவியலாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.