லிபிய தலைகர் திரிபோலியில் இரு முன்னணி ஆயுதக் குழுக்கள் இடையே (16) ஏற்பட்ட மோதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 106 பேர் காயமடைந்துள்ளனர்.
லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி 2011 ஆம் ஆண்டு பதவி கவிழ்க்கப்பட்ட பின் அதிகாரத்தை பெற போராடி வரும் பல ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 444 படையணி மற்றும் அல் ராதா போராளிகளுக்கு இடையிலேயே கடந்த திங்கட்கிழமை இரவு தொடக்கம் செவ்வாய்க்கிழமை முழுவதும் மோதல் நீடித்துள்ளது.
தலைநகரின் தெற்கில் மோதல் நீடிக்கும் பகுதிகளில் இருந்து மொத்தம் 234 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
மோதல் வெடித்ததை அடுத்து அந்தப் பகுதியில் மூன்று கள மருத்துவமனைகள் நிறுவப்பட்டிருப்பதோடு சுமார் 60 அம்புலன்ஸ் வண்டிகள் விரைந்துள்ளன.
444 படையணியின் தலைவர் கர்னல் முஹமது ஹம்சாவை போட்டிக் குழுவான அல் ராதா தடுத்து வைத்ததை அடுத்தே மோதல் ஏற்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் திரிபோலியை தளமாகக் கொண்ட ஐ.நா ஆதரவு அரசு மற்றும் நாட்டின் கிழக்கை தளமாகக் கொண்டு இராணுவ ஜெனரலான கலீபா ஹப்தர் தலைமையிலான அரசு என இரு போட்டி அரசுகள் இயங்குகின்றன.
கடந்த ஆண்டு ஓகஸ்டில் இந்த இரு போட்டி தரப்புகள் இடையே ஏற்பட்ட உக்கிர மோதலில் 32 பேர் கொல்லப்பட்டு மேலும் 159 பேர் காயமடைந்தனர்.