மணிப்பூரில் தொடரும்அவலம்….. பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் கொடூரம் …79 நாட்களாக மோடியின் மௌனம் …?
மணிப்பூர் அதிர்ச்சி வீடியோவில் காணப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இந்திய ராணுவத்தில் அசாம் ரெஜிமென்ட்டின் சுபேதாராக பணியாற்றியவர். உள்ளூர் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “நான் கார்கில் போரில் போராடியவன். அதேபோல் இலங்கைச் சென்ற இந்திய அமைதிக் குழுவில் இருந்திருக்கிறேன். நாட்டைப் பாதுகாக்க முடிந்த என்னால் என் மனைவியையும், என் சக கிராமத்தினரையும் காப்பாற்ற முடியவில்லையே” என்றார் வேதனையாக.
மேலும் அவர், “துக்ககரமான அந்த மே 4-ம் தேதி கிராமத்தில் பல வீடுகளை எரித்து இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி கிராமத்து சாலையில் பலர் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்து சென்றது. இந்தச் சம்பவங்கள் நடக்கும்போது போலீசார் அங்கே இருந்தனர். ஆனால் எதுவும் செய்யவில்லை. வீடுகளுக்கு தீ வைத்து பெண்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டவர்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.
மணிப்பூரில் குகி பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றவர்களில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட கும்பலுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலுவான குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றவர்களில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஹிராதாஸ் (32) என்ற அந்த நபர் வியாழக்கிழமை தௌபால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக மணிப்பூர் போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வீடியோவில் உள்ள பிற நபர்களைப் பிடிக்க 12 குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மணிப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது? – மணிப்பூரில் குகி ( பழங்குடி மக்கள்) – மைதேயி இன மக்களிடையே கடந்த மே மாதம் 3-ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதற்கு மறுநாள் சுமார் 800 முதல் 1,000 பேர் ஆயுதங்களை ஏந்தியபடி பி.பைனோம் கிராமத்துக்குள் நுழைந்து குகி மக்களின் சொத்துகளை சேதப்படுத்தி எரித்தனர். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
குகி மக்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு பயந்து பி.பைனோம் கிராமத்தைச் சேர்ந்த 2 ஆண்கள், 3 இளம்பெண்கள் காட்டுக்குள் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அவர்களை நோங்போக் செக்மாய் போலீஸ் குழு மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது மைதேயி சமூக கும்பல் ஒன்று, அவர்களை கடத்திச் சென்றுள்ளது. இதில் இரு ஆண்களையும் கொலை செய்த அக்கும்பல், மூன்று பெண்களையும் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கிறது. இதில் ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வன்முறை காரணமாக அங்கே பல வாரங்களாக இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை பிரதமர் மோடி எந்தவொரு கருத்தையும் கூறாமல் இருந்த நிலையில், சுமார் 2.5 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக இது குறித்து வாய் திறந்துள்ளார்,
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் இருக்கிறார்கள். இதற்கிடையே அங்கே பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி இன மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் மைத்தேயி மக்களைப் பழங்குடியினர் பிரிவில் சேர்த்தால் தங்களது உரிமை பாதிக்கப்படும் என்று அதற்குக் குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக மணிப்பூரில் மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கே போலீசார், ராணுவப் படை என ஏகப்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கே வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் வன்முறை தொடர்ந்தே வருகிறது. மேலும், அங்கே பல வாரங்களாக இணையச் சேவை கூட முடக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அங்கே வன்முறை கட்டுக்குள் வரவில்லை. இந்தச் சூழலில் நேற்றைய தினம் மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின பெண்களை அங்குள்ள ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். அந்த பெண்களிடம் சில இளைஞர்கள் அத்துமீறியும் உள்ளனர். மேலும், அந்த பெண்கள் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நேற்று இந்த வீடியோ வெளியாகி பகீர் கிளப்பியிருந்தது.
79 நாட்களாகப் பிரதமர் மோடி இதில் எந்தவொரு கருத்தையும் கூறாமலேயே ……..
பிரதமர் மோடி: இதற்கிடையே மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி முதல்முறையாகக் கருத்து தெரிவித்துள்ளார். அங்கே இனக் கலவரம் வெடித்து 79 நாட்களுக்குப் பிறகு, மாநிலத்தில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டு, பல ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் வசிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி ஒரு வழியாக இந்தப் பிரச்சினை குறித்து இன்று தனது கருத்துகளைத் தெரிவித்துவிட்டார். மணிப்பூர் வன்முறையைக் கண்டு தனது இதயம் வலிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதேநேரம் மணிப்பூர் வன்முறை குறித்து மட்டும் பேசாமல் காங்கிரஸ் ஆளும் இரண்டு மாநிலங்களிலும் வன்முறை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த ஜனநாயகக் கோவிலுக்கு அருகில் நிற்கும்போது, என் இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்தவொரு நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடான சம்பவம்.
இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்” என்று கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் பெண்களுக்கு நடந்ததை மன்னிக்கவே முடியாது. இந்த சம்பவம் நாட்டுக்கே அவமானகரமானது, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாநில முதல்வர்களும் சட்ட ஒழுங்கை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாகப் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மணிப்பூர், சத்தீஸ்கர், ராஜஸ்தான் என எந்தவொரு மாநிலமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஆகும்.
மவுனத்தைக் கலைத்தார் மணிப்பூர் வன்முறை தொடர்பாகப் பிரதமர் மோடி கருத்து கூற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் சுமார் 2.5 மாதங்கள் அதாவது 79 நாட்களாகப் பிரதமர் மோடி இதில் எந்தவொரு கருத்தையும் கூறாமலேயே இருந்தார். இந்தச் சூழலில் தான் முதல்முறையாக அவர் இது தொடர்பாக வெளிப்படையாகக் கருத்து கூறியுள்ளார்.. “எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது. இந்தச் சம்பவம் எந்த ஒரு நாகரிக சமூகத்துக்கான அவமானம்” என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார் இப்போதும் கூட அங்கே நிலவி வரும் இனக் கலவரம் குறித்தோ, கொலைகள் குறித்து, வீடுகள் தீவைக்கப்படுவது குறித்து பிரதமர் எந்தவொரு கருத்தையும் கூறவில்லை
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று (சனிக்கிழமை) மீண்டும் புதிதாக வன்முறை வெடித்தது. காரி பகுதியில் இரு முக்கிய சாலைகளை பெண்கள் முற்றுகையிட்டனர். டயர்களைக் கொளுத்திபோட்டு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸார், ராணுவம், அதிரடிப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அந்தப் பகுதியில் தீ வைக்கப்பட்ட டயர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடு. அப்பகுதியில் கொடி அணிவகுப்பும் நடத்தினர். காரி பகுதி மட்டுமல்லாமல், அருகில் உள்ள பல பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
மணிப்பூர் வன்முறை காரணம் மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுவரை அங்கு 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கலவரத்தின் வேர்களைத் தேடினால், அது மணிப்பூரில் மைதேயி சமூகத்துக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கிய உத்தரவுக்கு இழுத்துச் செல்கிறது. மணிப்பூர் மக்களை தொகையில் 53 சதவீதம் மைதேயி மக்களே உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் இம்பால் சமவெளிப் பகுதிகளில் வாழ்கின்றனர். நாகா, குகி போன்றவர்களை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 சதவீதம் உள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.
சமவெளியில் இருக்கும் மைதேயி சமூகத்தினர் கல்வி, தொழிலில் ஏற்கெனவே முன்னேறிய சமூகமாக அறியப்படுகிறார்கள். அரசியலிலும் இவர்களின் பிரதிநிதித்துவம் அதிகம். அதனால் மலைப்பகுதியில் வசிக்கும் குகி பழங்குடியினர் மைதேயி சமூகத்தினரை பட்டியல் இனத்தில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மணிப்பூரில் மைதேயி சமூகத்துக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூக மக்கள் நடத்திய அமைதி பேரணியில், அவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் மோதல் ஏற்பட்டது.
சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில்தான் கடந்த மே 4 ஆம் தேதி நடந்த கொடூரங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட இளம் பெண்களின் வீடியோ, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட இளம்பெண் எனப் பல வன்முறைகள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. மைதேயி தரப்பில் 4 பெண்களும், குகி ஸோ தரப்பில் 20 பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று காலை இம்பாலின் காரி பகுதியில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாலும் டயர்களை கொளுத்தியதாலும் பதற்றம் ஏற்பட்டது. இதில் ஈடுபட்ட தரப்பு மைதேயி சமூகத்தினரா அல்லது குகி சமூகத்தினரா என்பது இன்னும் தெரியவரவில்லை
மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தில் மூன்று பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னர், மே 6-ம் தேதி 45 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது எரிந்த உடலின் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மே 3-ம் தேதி கலவரம் தொடங்கியதில் இருந்து அங்கு பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்கொடுமைகளின் தொடர்ச்சியான சம்பவங்களில் இந்தக் கொடூரமும் ஒன்று.
கடந்த மே 4-ம் தேதி தெளபால் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஜூலை 19-ம் தேதி வீடியோ மூலம் வெளியாகி தேசத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாநிலத்தில் இணையத் தடை முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாத நிலையிலும், அந்தத் கொடூரம் வெளியே வந்துள்ளது. அந்த வன்கொடுமைத் தொடர்பாக இதுவரை 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தெளபால் சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (ஜூலை 20) மாநிலத்தில் ஆளும் பாஜகவின் 7 பேர் உள்ளிட்ட 10 குகி சமூகத்தைச் சேர்ந்த 10 எம்எல்ஏகள், மே 3-ம் தேதியில் இருந்து அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட நான்கு சம்பவங்களைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பெரிய கலவரக் கும்பல் ஒன்று கிராமத்தைத் தாக்கி அழித்த அடுத்த நாள், இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவரின் பாதி உடலை தான் பார்த்தாக, பீடைச்சிங் கிராமத்தின் பாதிரியார் தியானா வைபேயி சவுன்டாக் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளார். ராணுவத்தினரின் பாதுகாப்புடன் அவர் கிராமத்துக்குள் சென்றிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அந்தப் பெண்ணின் உடல் பாதி எரிந்திருந்தது. அவர் ஆடையின்றி இருந்தார். அவரது உடலை இம்பால் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். இப்போது, அந்த உடல் எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. மே 6-ம் தேதி கிராமத்துக்குள் நுழைந்த அந்தக் கும்பல் கறுப்பு உடைகள் அணிந்திருந்தனர். மணிப்பூர் மாநில கமாண்டோ வீரர்களும் அவர்களுடன் இருந்தனர்.
எங்கள் வீடுகள் தீ வைக்கப்பட்டு அழிக்கப்பட்ட பின்னர் கிராமத்தில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தனியாக வாழ்ந்து வந்த ஒரு பெண்ணால் ஓடி வெளியேற முடியவில்லை. கலவரக் கும்பல், அவரைப் பிடித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள், அவரை கொலை செய்து உடலைச் சிதைத்தனர். இதுகுறித்து நான் அளித்த புகாரின்படி, காங்போக்பி மாவட்ட காவல் நிலையத்தில் கலவரம், கொலை செய்தல், தீ வைத்தல் போன்ற குற்றங்களுக்காக ஜூரோ எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸார் எங்களுக்கு உதவுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். மாறாக, அவர்கள் எங்களை நோக்கிச் சுட்டனர். கிராமத்தின் தன்னார்வலர்களும் ஓடிவிட்டனர். அது ஒரு கொடூரமான சூழ்நிலை. இதற்கு முன் அப்படி ஓர் அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை” என்று அந்த பாதிரியார்தெரிவித்தார்.
இந்த எஃப்ஐஆர் பின்னர் மே 16-ம் தேதி போரோம்பட் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இது குறித்து அடையாளம் தெரியாத குற்றவாளிகளுக்கு எதிராக, உள்நோக்கத்துடன் தாக்குதல், கடத்தல், கொலை செய்வதற்காக கடத்துதல், தவறாக மறைத்து வைத்தல், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தல் போன்ற குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூரில் மைதேயி சமூகத்துக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூக மக்கள் நடத்திய அமைதி பேரணியில், அவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூர் மக்களை தொகையில் 53 சதவீதம் மைதேயி மக்களே உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் இம்பால் சமவெளிப்பகுதிகளில் வாழ்கின்றனர். நாகா, குகி போன்றவர்களை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
காங்போக்பி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றொரு ஜூரோ எஃப்ஐஆர் தகவலின்படி, மே 4-ம் தேதி, கிழக்கு இம்பாலில் இரண்டு பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண்கள் கிழக்கு இம்பாலில் உள்ள கார்கள் சுத்தம் செய்யும் கடை ஒன்றில் வேலை செய்துள்ளனர். கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், “கோனுங் மாமாங் அருகே உள்ள அவர்களின் வாடகை வீட்டில் 100 முதல் 200 பேர் கொண்ட கும்பல்களால் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்களின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அந்த தாய் வேதனையாக தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை கட்டுப்படுத்தப்படாத நிலையில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிக்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் இம்பாலில் மத்திய அமைச்சர் ஆர்.கே ரஞ்சன் சிங் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.