செஸ் உலகில் இந்தியாவின் இளம் செஸ் வீரர் என்கிற பெருமையுடன் நிற்கும் பிரக்ஞானந்தாவின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அவருடைய அம்மா நாகலட்சுமியின் கடின உழைப்பு, தியாகம்.
ன்று FIDE உலகக் கோப்பை செஸ் போட்டியில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். கடைசி வரை போராடி, டை பிரேக்கர் சுற்றில், இரண்டு முறையும் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இருப்பினும், இளம் வயதில் உலகக் கோப்பை செஸ் போட்டி இறுதிவரை அடைந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் பிரக்ஞானந்தா. செஸ் சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது பிரக்ஞானந்தாவாக இருந்தாலும் அவரது வாழ்க்கை சதுரங்கத்தில் ராணியாக வலம் வருபவர் அவருடைய அம்மா நாகலட்சுமி. எதிரிகளை காத்து எல்லா பக்கத்திலும் பாதுகாவலாக ராஜாவிற்கு துணையாக இருப்பது போல செஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியதில் இருந்து இளம் செஸ் மாஸ்டரான பிரக்ஞானந்தாவிற்கு துணையாக இருந்து கொண்டிருக்கிறார் நாகலட்சுமி. பிரபலங்களின் வைரல் புகைப்படங்கள் வரிசையில் சில நாட்களாக செஸ் ஸ்டாரான பிரக்ஞானந்தாவின் தாய் நாகலட்சுமியின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
பல நாள் கனவே, ஒரு நாள் நனவே, ஏக்கங்கள் தீர்த்தாயே என்கிற பாடல் வரிகளைப் போல FIDE உலகக் கோப்பை செஸ் அரையிறுதிப் போட்டியில் ஃபேபியானோ கர்னாவை வீழ்த்திய தன் மகனின் வெற்றியை எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். மெலிந்த தேகத்துடன் சாதாரண புடவையில் அமர்ந்திருந்த அந்த வெள்ளந்தியான முகம் அது வரை காத்திருந்த அமைதியை உடைத்து புன்னகைத்தது. நாகலட்சுமியின் இந்தப் புகைப்படத்தை பதிவிட்டு ரஷ்யாவின் செஸ் கிராண்ட் மாஸ்டரான காரி காஸ்பரொவ்,“ஒவ்வொரு நிகழ்விலும் துணையாக இருந்த பெருமைக்குரிய அம்மா, அது ஒரு சிறப்பான உறுதுணை,” என்று பாராட்டி இருந்தார்.
கண்ணும் கருத்துமான கவனிப்பு நிச்சயமாக நாகலட்சுமி பிரக்ஞானந்தாவின் அசைக்க முடியாத நம்பிக்கை தான். பிரக்கியின் பயிற்சியாளர்கள் சக போட்டியாளர்கள் என யாரைக் கேட்டாலும் அவரை சிறந்த செஸ் வீரராக வடிவமைத்ததில் அவருடைய அம்மாவின் பங்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சொல்லிவிடுவார்கள். செஸ் வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது, வீட்டில் எந்த தொந்தரவும் இல்லாமல் அவர் பயிற்சி செய்வதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தருவது, பல ஆயிரம் மைல்கள் பயணித்தாலும் வீட்டுச் சாப்பாட்டை தன் கையாலேயே சமைத்துத் தருவது என்று பிரக்கிக்கு உதவுவது மற்றும் மகள் வைஷாலியை கிராண்ட் மாஸ்டர் பிரிவு வரை கொண்டு செல்ல உதவியது என்று நாகலட்சுமியின் உலகம் இவர்களைச் சுற்றியே வந்துள்ளது. குழந்தைகளே உலகம் பிரக்ஞானந்தா அமைதியாக செஸ் விளையாடிக்கொண்டிருக்கும் போது என்னுடைய இதயத்துடிப்பு அதிகரிக்கும் அந்த “லப் டப்” சத்தம் வெளியே யாருக்காவது கேட்டு விடுமோ என்றெல்லாம் கூட நான் பயந்திருக்கிறேன் என நாகலட்சுமி அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“உணர்ச்சிகளை வெளிக்காட்டக் கூடாது என்று அவனுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தாலும் என் மகன் விளையாடும் போது என்னை அவன் கவனிப்பதை தவிர்த்து விடுவேன். ஏனெனில், அவன் என்ன நினைக்கிறான் என்பதை பார்வையிலேயே நான் அறிவேன். அவன் எந்த தருணத்தில் அதிக நம்பிக்கையுடன் விளையாடுகிறான், எந்த நேரத்தில் நம்பிக்கை குறைகிறது என்பது எனக்குத் தெரியும்,” என்றும் நாகலட்சுமி கூறியுள்ளார்.
செஸ் விளையாடத் தெரியாது ;
மகனை செஸ் பயிற்சிகள் மற்றும் போட்டிகளுக்கு இத்தனை ஆண்டுகள் அழைத்து சென்று வந்தாலும் தனக்கு செஸ் விளையாடத் தெரியாது என்பதை ஒப்புகொள்கிறார் நாகலட்சுமி. சென்னையைச் சேர்ந்த ப்ளூம் செஸ் அகாடமியின் பயிற்சியாளரும் பிரக்கியின் முதல் பயிற்சியாளருமான தியாகராஜன், போட்டிகளுக்கு பிரக்கியுடன் அவருடைய தாயும் வருவதை நினைவு கூர்ந்தார். போட்டிகள் நடைபெறும் இடத்தில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிடுவார் நாகலட்சுமி, அது எந்த மட்டத்திலான ஆட்டமாக இருந்தாலும் பிரக்கிக்கு 7 வயது இருந்த போது நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு ஆட்ட இடைவெளியின் போது பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்.
“பிரக்கிக்கு காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பயிற்சிகள் நடக்கும், சில நேரங்களில் வீட்டுப்பாடமாக 4 மணி நேர பயிற்சியோ அல்லது 7 மணிக்குப் பிறகு வீட்டிலேயே வைத்தோ பயிற்சி அளிக்கும் போதும் கூட முகம் சுளிக்காமல் பிரக்கியின் அம்மாவும் அவருக்கு துணையாகவே இருப்பார்,” என்று கூறுகிறார் தியாகராஜன்.
அவர்களின் பயிற்சி முடிக்க 10 மணி ஆகிவிடும் அதற்குப் பின்னரே என்னுடைய வீட்டு வேலைகளை முடிப்பேன். அதனால் தான் செஸ் கற்றுக் கொள்ள எனக்கு நேரமில்லை, அவர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம் என்ற சொல்லும் நாகலட்சுமியின் அன்றாட பணி காலை 6 மணிக்குத் தொடங்கி நள்ளிரவில் முடிகிறது.
குழந்தைகளாக இருந்த போது பிரக்கியும், வைஷாலியும் அதிகம் தொலைக்காட்சி பார்க்கிறார்கள் என்றே செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டேன். இன்று வீட்டில் எப்போதாவது டிவி ஓடுவதே கூட கடினம் தான். வீட்டை நான் எப்போதும் அமைதியாக வைத்திருப்பேன், அதனால் அவர்களால் கவனம் மனதை ஒருநிலைப்படுத்த முடியும் என்று சொல்லும் நாகலட்சுமி எங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் கூட குழந்தைகளுக்கு தொந்தரவு இல்லாமல் வெளியே வைத்தே பேசி அனுப்பி வைத்துவிடுவேன் என்கிறார்.
ஏன் எளிமையான உணவு :
போட்டிகளுக்காக வெளிநாடு உட்பட எங்கு சென்றாலும் முதலில் நாகலட்சுமி இன்டக்ஷன் அடுப்பு, ரசம் வைப்பதற்கு இரண்டு பாத்திரங்களை உடன் எடுத்துச் சென்று விடுவார். இந்த முறை கூட முதலில் நாகலட்சுமி பேக் செய்தது அரிசி, அரிசி குக்கர் மற்றும் மசாலா பொருட்கள் என்று கூறுகிறார் பிரக்கியின் தந்தை ரமேஷ்பாபு.
“சவுகரியமான எளிமையான உணவைச் சாப்பிடுவது போட்டியில் பிரக்கியை சரியான மனநிலையில் வைத்திருக்கு உதவும்,” என்று கூறுகிறார் அவர்.