மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த தொடர் மழை நின்று 48 மணிநேரம் ஆகியும், சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது.தாம்பரம், வேளச்சேரி, பெரும்பாக்கம், முடிச்சூர் ஆகிய சென்னையின் புறநகர் பகுதிகளிலும், வட சென்னையின் வியாசர்பாடி, புளியந்தோப்பு, சூளை உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று வரை மழை நீர் வடியாமலும், மின் விநியோகம் இல்லாமலும் மக்கள் தவித்து வருகின்றனர்.
மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவடைந்ததாக தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. இந்நிலையில், செய்தியாளர்கள் நேற்று மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட முடிச்சூர் சாலைக்கு அருகில் இருக்கக்கூடிய பாரதி நகர் மற்றும் குட் வில் நகர் பகுதிக்குச் சென்றிருந்தனர்.அப்போது அங்கிருந்த மக்கள் மழை நீர் தேங்கும் என்பது குறித்து அரசு சார்பில் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் கொடுக்கவில்லை என கூறியுள்ளனர்.
“மழை பெய்தபோது சாலையிலோ அல்லது அவர்களின் வீடுகளுக்கு உள்ளோ தண்ணீர் வரவில்லை. மழை நின்ற பிறகுதான் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. செவ்வாய்க் கிழமை நிலவரப்படி சாலையில் சுமார் 6 முதல் 7 அடியளவு தண்ணீர் இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.
நேற்று அந்த நீர் சற்று குறைந்து 4 அடியளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால், செவ்வாய்க் கிழமையன்று மோசமான நிலையில் இருந்தபோது அரசுத் தரப்பில் இருந்து யாரும் வந்து பார்க்கவில்லை என்று வேதனை தெரிவித்த மக்கள், மீட்புக் குழுவினரே நேற்றுதான் மீட்புப் பணிகளுக்காக அப்பகுதிக்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ளனர், மீட்புப்பணிக்காக யாரும் வராத கோபத்தில், மக்கள் தாங்களாகவே தண்ணீரில் இறங்கி ஆபத்தான முறையில் அப்பகுதியில் இருந்து வெளியேறி வருவதைப் பார்த்ததாகக் கூறினார்
“மக்களை யாரும் மீட்க வரவில்லை. தண்ணீர், உணவு என எதுவும் கிடைக்காத விரக்தியிலும், கோபத்திலும், வயதானவர்களும், கைக் குழந்தைகளை வைத்திருப்பவர்களும் தேங்கியுள்ள தண்ணீரை பொருட்படுத்தாமல், தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.தண்ணீர் தேங்கியதைவிட, அதை முன்கூட்டியே எச்சரித்திருந்தால், பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிருப்போம் என அப்பகுதி மக்கள் கூறினர்,” அதோடு, மீட்புப் பணியிலும் சுணக்கம் இருப்பதைப் பார்க்க முடிந்தது.
“புதன்கிழமை காலையில் இருந்துதான் மீட்புப் பணிகளையே துவங்கியிருக்கிறார்கள். ஆனால் அதிலும், வெறும் இரண்டு ரப்பர் படகுகள் மட்டுமே மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுமார் நான்காயிரம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு இரண்டு ரப்பர் படகுகளை மட்டுமே கொண்டு மீட்புப் பணியை மேற்கொள்வது அம்மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது,” கள ஆய்வில், அப்பகுதியில் 2015க்குப் பிறகு தற்போதுதான் தண்ணீர் தேங்குவதாகவும், அதேவேளையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
வேளச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மழை நின்று பல மணிநேரம் ஆகியும் மீட்புப் பணிக்கு யாரும் வராததே அப்பகுதி மக்களின் பிரச்னையாக இருந்தது.
“வேளச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் பெருமளவு சதுப்பு நிலங்களில் கட்டப்பட்டவை. அதனால், எப்போது மழை பெய்தாலும், அப்பகுதிகளில் மழை நீர் வருவது வழக்கம்.ஏனெனில், அப்பகுதி வழியாக வடிந்துதான், மழை நீர் ஏரிக்கும், ஆற்றுக்கும், கடலுக்கும் செல்லும். ஆனால், இப்போது அதைவிட முக்கியப் பிரச்னை, மழைநீர் தேங்கியபோதும் மீட்க யாரும் வரவில்லை என்பதே. இந்த ஆதங்கம் அப்பகுதி மக்கள் அனைவரிடமும் தென்பட்டது.
செவ்வாய்க்கிழை மதியம்தான் மீட்புப்படையினரே வந்துள்ளனர். அவர்களும், மாலை 6 மணி வரை மீட்புப் பணிகளில் இருந்துவிட்டு, இருட்டிய பிறகு கிளம்பியுள்ளனர். மீண்டும் அடுத்த நாள் காலைதான் மீட்புப்பணியைத் தொடங்கியுள்ளனர். இதனால், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கே மக்கள் அவதிப்பட்டுள்ளனர்,”
தரமணி பகுதிக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை யாரும் மீட்க வராததால், இடுப்பளவு தண்ணீரில் மக்களே வேறு இடங்களுக்கு சென்றதைப் பார்க்க முடிந்தது.தரமணியில் சோழமண்ணன் வீதி, கட்டபொம்மன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. மழை நின்று இரண்டு நாட்கள் ஆகியும் நீர் வடியாததாலும், மீட்பதற்கு யாரும் வராததாலும், இடுப்பளவு தண்ணீரில் மக்களே வெளியேறத் தொடங்கினர். வெளியேற முடியாத சில முதியவர்கள், சாலையின் ஓரத்தில் இருந்த படிக்கட்டுகளிலேயே உணவின்றி உறங்கிக்கொண்டு உதவிக்காகக் காத்திருந்தனர்,”
சதுப்பு நிலங்கள், கரையோரத்தில் உள்ள காலியிடங்களில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்ததும், வீடுகள் கட்டியதுமே மழைநீர் இவ்வளவு நாட்களாகியும் வடியாததற்கான காரணம் என்கிறார் சென்னை புறநகர் பகுதியில் நிர்நிலைகள் குறித்துத் தொடர்சியாக ஆய்வு மேற்கொண்டு வருபவரும், ஆர்வலருமான டேவிட் மனோகர்.இது இப்போதைய பிரச்னை மட்டுமல்ல. எப்போது மழை பெய்தாலும் இந்தப் பகுதிகளில்(வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரனை உள்ளிட்ட பகுதிகளில்) தண்ணீர் தேங்கும். அதன் அளவு மட்டுமே மழையின் அளவுக்கு ஏற்ப மாறுபடும். ஆதனுர் ஏரியில் இருந்துதான் தண்ணீர் அடையாற்றுக்கு வரும்.
முடிச்சூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும், வேளச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மக்கள் ஏரிகளையும், ஆறுகளையும் மட்டும் விட்டுவிட்டு, அதை ஒட்டியுள்ள வெள்ளப்பகுதிகள், நீர்பிடிப்புப் பகுதிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வீடுகளைக் கட்டிவிட்டனர்.அதனால், தற்போது வெள்ளம் ஆற்றில் பெருக்கெடுத்து ஒடும்போது, ஏரிகள் நிறைந்து சதுப்பு நிலங்களில் வடிகிறது. இப்படி வடியும் பகுதிகளெல்லாம் குடியிருப்புகளாக இருப்பதால், இந்தப் பகுதிகளில் தண்ணீர் வருவதும் தேங்குவதும் நடக்கும். இதற்கு இப்பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்த அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும்,” என்கிறார் மனோகர்.
மேலும், 2015இல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது நீர் தேங்கிய இடங்களைவிட, தற்போது மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த மழையால், அதிக இடங்களில் நீர் தேங்கியுள்ளதாகக் கூறுகிறார் மனோகர்.“இதற்குக் காரணம், 2015க்கு பிறகு, கடந்த எட்டு ஆண்டுகளிலும் இந்தப் பகுதிகளில் அதிகளவில் கட்டுமானங்கள் நடந்ததுதான். கடந்த வெள்ளத்தின்போது ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தமிழ்நாடு அரசு எந்தப் பாடமும் கற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது,” என்கிறார் மனோகர்.
வட சென்னையின் வியாசர்பாடி, பட்டாளம், கொளத்தூர், கனிகாபுரம், புலியந்தோப்பு, சூளை, எம்.கே.பி நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை வரை நீர் வடியாமல் உள்ளது. நீர் வடியாததால், மின் வசதி இல்லாமலும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.எல்லா மழைக் காலங்களின் போதும் வடசென்னை பகுதியில் மழைநீர் தேங்குவதாகவும், ஆனால், எப்போதும் அந்தப் பகுதிக்குத் தான் அதிகாரிகள் கடைசியாக வருவதாகவும், வியாசர்பாடியைச் சேர்ந்த மீனா கூறுகிறார்.“நான் சிறுவயதில் இருந்து பார்க்கிறேன். எப்போது மழை பெய்தாலும், தண்ணீர் எங்கள் சாலைகளில் தேங்கி நின்றுவிடும், பல நேரங்களில் வீடுகளுக்கு உள்ளும் தண்ணீர் வந்துவிடும். இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையிலேயே இவ்வளவு ஆண்டுகளாகிவிட்டது.
இப்போது பட்டப்படிப்பு முடித்து வேலைக்குச் செல்கிறேன். தற்போது, நான் இதை அரசு அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். சமூக ஊடகங்களின் வாயிலாக இந்த அவலத்தை வெளியுலகத்திற்குச் சொல்லியுள்ளேன். இருந்தும், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறுவயதில் இருந்தே இந்த இயலாமை துரத்திக்கொண்டே இருக்கிறது,” என்கிறார் மீனா.மழைநீர் தேங்குவதற்கான காரணம் குறித்துப் பேசிய மீனா, “தண்ணீர் தேங்குவதற்கு மழைநீர் வடிகால் பணிகளைச் சரியாக மேற்கொள்ளாதது ஒரு காரணம். மற்றபடி, மழை நின்று இரண்டு நாட்களாகியும் யாரும் வந்துகூடப் பார்க்கவில்லை, அதுதான் எங்களுக்கு பெரிய பிரச்னை. தற்போது வரை நீரை வெளியேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேங்கிய நீர் வெளியேறினால் தான் மின் இணைப்பு தருவார்கள். எப்போது சரியாகும் எனத் தெரியவில்லை,” என்கிறார் மீனா.
“இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிறது. இப்போது வரை நீர் வடியவில்லை. யாரும் வந்து பார்க்கக்கூட இல்லை. இன்று மாலைதான் எந்தெந்தப் பகுதிகளுக்கு உதவி தேவை என்றே கேட்டிருக்கிறார்கள். இனிமேல்தான் உதவிகள் கிடைக்கும் என நினைக்கிறேன்,” என்கிறார் வியாசர்பாடியைச் சேர்ந்த நர்மதா.
கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது தேங்கிய மழைநீரைவிட, இந்த முறை அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், அதற்கு, கடந்த எட்டு ஆண்டுகளில் வடசென்னையில் உள்ள ஏரிகள் மற்றும் ஏரிக்கரையோரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் காரணம் என்றும் கூறுகிறார் அப்பகுதியில் வசிப்பவரும், சமூக ஆர்வலருமான ஷாலின் மரியா லாரன்ஸ்.
“மழைநீர் வடிகால் பணி 95 சதவீதம் நிறைவடைந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணி நடைபெறவில்லை என்பதுதான் கள யதார்த்தம். மழை நீர் தேங்கியதற்கான காரணமும், அதைச் சரி செய்ய வேண்டியதும் நீண்ட காலத்திட்டம்தான். தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், வீடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும் அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் மக்களின் கோபம்,” தமிழ்நாடு அரசு இந்தப் புயலின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளார்கள் என்பதையே இது காட்டுகிறது என்றார் ஷாலின்
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சென்னையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், “பாதிப்புகள் இருக்கும் எனத் தெரியும். ஆனால், இவ்வளவு பாதிப்புகள் இருக்கும் எனத் தெரியவில்லை. தொலைபேசி சிக்னல் பல இடங்களில் இல்லாததால், பாதிப்புகள் ஏற்பட்டவுடன் மீட்புப் பணிக்குத் தேவையான ஆட்களைத் திரட்டுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இன்றுதான் ஓரளவிற்குத் தேவையான ஆட்களை திரட்டி மீட்புப் பணிகளை நடத்தி வருகிறோம்,” என்றார் அந்த அதிகாரி.வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள், மின் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரிடம் பேச முயன்றோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை.
இதுகுறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “வெள்ளம் ஏற்படுவது குறித்து எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அதன் அளவும், வீரியமும் மாறுபட்டுள்ளது. இருப்பினும், 36 மணிநேர தொடர் மழைக்குப் பிறகு முடிந்தவரை தண்ணீரை வெளியேற்றியுள்ளோம்.தற்போது (புதன்கிழமை இரவு 9மணி) வரை 75 சதவீதமான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளது. மக்களை மீட்டுள்ளோம். மீதமுள்ளவர்களையும் விரைவில் மீட்போம், நீரை விரைவில் வெளியேற்றுவோம்,” என்றார்.
மழைநீர் வடிகால் குறித்துக் கேட்டபோது, “மழை நீர்வடிகால் பயனளிக்கவே இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. இதுவோர் அசாதாரண சூழல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மழைநீர் வடிகால் பயனளிக்கவில்லை என்றால், தற்போது 75 சதவீதம் பகுதிகளில் மழைநீர் வடிந்திருக்காது.தற்போது மழைநீர் வடிகால் வழியாக மழைநீர் வெளியேறாத பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், அது உடனடியாகச் செய்ய வேண்டியது இல்லை. அது நீண்டகால செயல்முறை. இப்போது மீட்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்
.