எலான் மஸ்க் அதிரடியாக ட்விட்டர் லோகோவை மாற்றினார்..
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் 1 நாளைக்கு பயனர்கள் குறிப்பிட்ட பதிவுகள் மட்டும் தான் பார்க்கமுடியும் என ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார். மேலும் புளூ டிக் பயன்படுத்துவோருக்கு கட்டணம், ட்விட்டரில் விளம்பரம் செய்து பொருளீட்டுதல் போன்ற மாற்றத்தை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் ட்விட்டர் லோகோவை மாற்ற உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். சமீபத்தில் நாய் (Doge) படத்தை லோகோவாக மாற்றியிருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதேபோல ட்விட்டர் சிஇஓ பொறுப்பையும் அதிரடியாக நீக்கீனார்.
எலான் மஸ்க்கின் அதிரடியான நடவடிக்கைகளுக்கு பலரது மத்தியில் விமர்சனங்கள் எழுந்தது. லோகோவை மாற்றுவது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ட்விட்டரின் லோகோ நீலக் குருவிக்கு பதிலாக எக்ஸ் (‘X’) என லோகோ மாற்றப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
மற்றொரு பதிவில், ”விரைவில் டிவிட்டரின் பிராண்டை மாற்ற உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து அனைத்து பறவைகளும் விடுவிக்கப்படும்” எனவும் குறிப்பிட்டிருந்தார். அதோடு, டிவிட்டரின் புதிய லோகாவான ”எக்ஸ்” தொடர்பான சிறிய வீடியோவயும் வெளியிட்டார்.
இந்த நிலையில் எலான் மஸ்கின் அறிவிப்பின் படி டிவிட்டர் லோகோ குருவிக்கு பதிலாக X என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் மாற்றம் செய்யப்பட்டது குறித்து இணையத்தில் Twitter X என்கிற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான ஆப் ஆன த்ரெட்ஸை மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் த்ரெட்ஸ் ஆப்ஸ் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நமது இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைந்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உள்ளடக்கிய 500 எழுத்துகள் கொண்ட ‘த்ரெட்களை’ நாம் பதிவிடலாம்.
த்ரெட்ஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட முதல் 24 மணி நேரத்திற்குள் 3 கோடி பயனர்களை பெற்றது. அறிமுகம் செய்யப்பட்ட ஐந்து நாட்களில் 10 கோடி கணக்குகள் த்ரெட்ஸ் ஆப்பில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் தற்போது 15 கோடி பயனர்கள் த்ரெட்ஸ் ஆப்பில் கணக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பிற சமூக வலைத்தளங்களை ஒப்பிடுகையில் திரெட்ஸ் மிக வேகமாக இவ்வளவு பயனர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது எனலாம்.
ஆனால், த்ரெட்ஸ் ஆப்பின் பயன்பாட்டை பொருத்தவரையில் நாளுக்கு நாள் அது குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயலியின் நுண்ணறிவு நிறுவனமான சென்சார் டவர்ஸ், கடந்த ஜூலை 18-ம் தேதி முதல் த்ரெட்ஸ் ஆப்பின் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. செயலி தொடங்கப்பட்ட ஜூலை 6-ம் தேதி ஒப்பிடுகையில் ஜூலை 18ல் திரெட்ஸில் தினசரி பயன்பாட்டு சராசரி நேரம் மற்றும் பயனர்களின் எண்ணிக்கை 75%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.அதுபோல முதல் நாளை (ஜூலை 7) ஒப்பிடுகையில் ஜூலை 18-ம் தேதி அதன் பதிவிறக்கமும் 22% குறைந்துள்ளது. இதில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட நாடுகள் இந்தியா -28%, அமெரிக்கா-13%, பிரேசில் -13%, மெக்சிகோ -5%, ஜப்பான் – 4%. அதேநேரத்தில் திரெட்ஸ் செயலின் அறிமுகம் ட்விட்டரில் பயன்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, மாறாக ட்விட்டரின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவே இந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.