இன்று பரந்தூர் மக்களை சந்திக்கின்றார் விஜய். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை இதுவரை 35 தலைவர்கள் சந்தித்திருக்கும் நிலையில் 36வதாக வந்திருக்கும் விஜய்க்கு மட்டும் கடுமையான கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. மேலும் புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம் ,அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம் , நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கின்றனர். இந்த காரணத்தை முன்வைத்து புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள வசதி போல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது என கூறி எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் நிலப் பகுதிகளையும் எடுப்பதை தவிர்த்து விட்டு , தமிழக அரசு வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். ஏகனாபுரம் கிராமத்தைப் போல் அதனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். ஒப்பாரிப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என 600 நாட்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் பல வடிவங்களை சந்தித்து வருகிறது.
விவசாயத்தை அழிக்கக் கூடாது, தங்களுக்கு விமான நிலையம் வேண்டாம், விவசாயத்தை நம்பி தான் நாங்கள் பிழைத்து வருகிறோம், இத்தனை நாட்கள் போராடியும் முதலமைச்சர் தங்களை கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிலையில் பரந்தூர் மக்களை சந்திக்கப் போகிறார் விஜய் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழக அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது. வீட்டில் இருந்து அரசியல் செய்கிறார் என விமர்சிக்கப்பட்ட விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்திக்கிறார் என அறிவிக்கப்பட்டதோடு அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தது. தொடர்ந்து காவல்துறை அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று பரந்தூர் மக்களை சந்தித்துள்ளார் விஜய். அதே நேரத்தில் விஜய் வருகையை கேட்டு ஏராளமான மக்கள் திரள்வார்கள் என்பதால் திருமண மண்டபத்தில் சந்திக்கலாம் என காவல்துறை அனுமதி கொடுத்தது. இதை அடுத்து பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பேருந்து மூலம் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் விஜயை பார்க்க சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பரந்தூர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து ஆதார் கார்டு சோதனை செய்யப்பட்டு 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமே அப்பகுதிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் விஜய் கட்சியின் பொருளாளர் ஆன வெங்கட்ராமனை பரந்தூருக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. விஜய் கட்சி சார்பில் வழங்கப்பட்ட பட்டியலில் வெங்கட்ராமனின் பெயர் இல்லை எனக் கூறி போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தாய் விஜய் வருகை குறித்த கடிதத்தை காஞ்சிபுரம் காவல்துறைக்குக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து ஆங்காங்கே போலீசார், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பரந்தூர் மக்கள் இரண்டு ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் ஏற்கனவே பல தலைவர்கள் பொதுமக்களை சந்தித்து இருக்கின்றனர். அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி, அமமுக டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சீமான், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மே 17 திருமுருகன் காந்தி மற்றும் பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் 35 பேர் அப்பகுதி மக்களை சந்தித்து இருக்கிறார்கள்.