“புன்னகை அரசி” என அழைக்கப்படும் கே. ஆர். விஜயா தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவாகியுள்ளன.தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகையான இவர் , தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இவர் ‘தெய்வநாயகி’ என்னும் இயற்பெயர் உடன் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் ராமச்சந்திர ராவ் என்பவருக்கும், மங்களத்திற்கும் மகளாகப் பிறந்தார்.இவருக்கு வத்சலா, சாவித்திரி, சசிகலா, ராதா என்கிற நான்கு தங்கைகளும் நாராயணன் என்கிற ஒரு தம்பியும் உள்ளனர். தந்தைதிருவானந்தபுரத்தில் நகை வியாபாரம் செய்து வந்தார். பின்பு நகை வியாபாரத்தில் ஏற்பட்ட பெருத்த நட்டத்தால், பின்பு இவரது தந்தை ராமச்சந்திரன் தமிழ்நாடு பழனிக்கோவிலில் கோவில் அலுவலராக பணியாற்றும் போது கே. ஆர். விஜயா குடும்பம் பழனியில்குடியேறியது.
ஆரம்ப காலத்தில் நாடகக் குழுவிலும் சில மேடை நாடங்களில் நடித்து வந்த இவர் திரைக்கு வந்த பிறகு நடிகர் எம்.ஆர்.ராதா வால் விஜயா என்று அவரது பெயரை மாற்றி வைத்தார். இதை தனது தாய்/தந்தையின் முதல் எழுத்தை சேர்த்து கே.ஆர்.விஜயா என்று மாற்றி கொண்டார்.
இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படம் 1963 இல் வெளிவந்தது.
நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய கேஆர் விஜயா, 1963ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி வெளிவந்த ‘கற்பகம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ‘கந்தன் கருணை,சரஸ்வதி சபதம்,இதயக்கமலம், நம்ம வீட்டு தெய்வம்,தங்கப்பதக்கம்,திரிசூலம்,கல்தூண்,மிருதங்க சக்ரவர்த்தி, ‘வாயாடிதிருடி,ரோஷக்காரி,ராமன் எத்தனை ராமனடி,கந்தன் கருணை’ போன்ற படங்கள் அவரது நடிப்பில் முத்திரைப் பதித்த திரைபடங்களாகும்.
தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்னும் இரண்டு ஜாம்பவான்களுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு.