வல்வெட்டித்துறையின் முன்னணி ஆசிரியராகவும், பின்னர் பல வருடங்கள் புகழ் பூத்த அதிபராகவும் கல்விக்கும் சமூகத்திற்கும் உயர்வான சேவையை ஆற்றிய வள்ளல் “தாசன் மாஸ்ரர்” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப் படும் வைத்திலிங்கம் சிவகுகதாசன் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற அந்தத் துயரச் செய்தி எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி விட்டது.
மரணம் என்பது மனிதர்களாகப் பிறந்தவர்களுக்கு மட்டுமல்லாது சகல உயிரினங்களுக்கும் என்றோ ஒருநாள் கிடைக்கின்ற ஒரு முடிவு தான்….. ஆனால் அமரர் சிவகுகதாசன் அவர்களின் இறுதி நாட்கள் துன்பங்கள் நிறைந்தவையாக இருப்பதைப் பார்க்கும் பொழுது கடவுளின் மீதுதான் கோபமும், வெறுப்பும் வருகின்றது. வல்வெட்டித்துறையில் வாழ்ந்த மனிதர்களில் இறைபக்தி உள்ளவராகவும், எவருடனும் அன்பாகவும், கண்ணியமாகவும், நல்ல மனிதராகவும், நேர்மையானவனாகவும். கொடுத்து உதவும் வள்ளல் தன்மை உடையவராகவும் இருந்து வாழ்ந்த சிவகுகதாசன் மாஸ்டர் அவர்கள் இறுதி நாட்களில் அவரது அன்பு மனைவியையும் இழந்து துன்பங்களை அனுபவித்து நோய் வாய்ப்பபட்ட நிலையில் தனது வாழ்வை முடித்துக் கொண்டார் என்பதை நினைக்கும் பொழுது நெஞ்சில் ஆழமான வலி ஏற்படுகின்றது…..
ஆனால் அவர் எமது மண்ணுக்கு ஆற்றிய அரும்பணி எவருக்கும் தெரியாமலேயே போய் விடக்கூடாது என்பதற்காக அவர் யாருக்குமே தெரியாது செய்த பெரும் உதவியை இந்தச் சந்தர்ப்பத்திலாவது வெளிப்படுத்தி அவருக்குக் காணிக்கையாக்குகிறோம்.
1987இல் சயனைற் அருந்தி வீரச்சாவடைந்த குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைளினதும் வித்துடல்களை ஒரே சிதையில் வைத்துத் தகனம் செய்த தீருவில் புனித பூமியின் பாரம்பரியத்தையும், போர்த்துக்கேயருடனான இறுதிப் போரில், தளபதி வருணகுலத்தான் தலைமையில், சமர் நடந்த வீரம் செறிந்த விளை நிலத்தையும் காப்பாற்ற வல்வெட்டித்துறையின் நகர பிதாவாக நான் இருந்த பொழுது, அதனை அழகான பூங்காவாக அமைத்து வல்வெட்டித்துறை மற்றும் அயலூர்களில் உள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி எடுத்தபொழுது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TERROIST INVESTIGATION DEPARTMENT-TID) அதனை அமைக்கவிடாது தடுக்கும் வகையில் தடை உத்தர வைப்பிறப்பிக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிலையியற் கட்டளை பிறப்பிக்க மனு கையளித்தபொழுது, வடமராட்சியின்; கௌரவம் வாய்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் இதற்குக் கடும் எதிர்ப்பைக் காட்டியதால் நீதிமன்றம் TIDயினரின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
ஆயினும் “அடிபட்ட புலி ஆளைக் கொல்லாது விடாது” என்பது போல் “இந்த நிலம் விடுதலைப் புலிகளின் ஆதனம்” என்று கூறி, தவிசாளர் என்ற வகையில் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பொழுது பிரபல சட்டத்தரணியான திரு. நடராஜா ரஜீவன் அவர்கள் இலவசமாகவே வழக்காட முன்வந்தார்.
அப்பொழுது அந்த ஆதனத்தில் ஒரு துண்டு நிலம்கூட நகராட்சி மன்றத்தின் பெயரில் இருக்கவில்லை. இந்த நிலையில் முதலாலது அமர்வில் நீதிபதி அவர்கள் எங்களுக்கு உரிமை இருந்தால் அதற்கான எழுத்து மூல உறுதியைச் சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணியிடம் தெரிவித்த பொழுது அவரது ஆலோசனைக்கு அமைய திரு. சிவகுகதாசன் அவர்களை அணுகிய பொழுது பிள்ளைகளிடம் இருந்துகூட அனுமதி பெறாமலேயே தனது பெயரில் உள்ள நான்கு பரப்புக் காணியை நகராட்சி மன்றத்தின் பெயரில் சட்டத்தரணி திரு.நடராஜா அவர்கள் மூலம் இலவசமாகவே எழுதித் தந்தார்.
அதே போன்று “கட்டியண்ணா” என்று அழைக்கப்படும் திரு.தேவசிகாமணி அவர்களும் தனக்குச் சொந்தமான நான்கு பரப்புக் காணியை நகர சபைக்கு தானமாக வழங்கியதுடன் வல்வை சிவன் கோயில் ஆதனத்தின் ஒரு பகுதியான 21 பரப்புக் காணியையும் நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் எழுதித் தந்தமையால் நகராட்சி மன்றத்தின் பெயரில் 29 பரப்புக் காணி எழுதப்பட்டது.
இவற்றிற்கான உறுதி எழுத்துக் கட்டணத்தை கூட திரு.நடராஜா அவர்கள் எங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவில்லை. இந்த அன்பளிப்புக்களினால் இராணுவத்தினரின் கைகளுக்குப் பறிபோக இருந்த புனிதமான மண் எங்களுக்கே சொந்தமானது என்று தீர்ப்பளித்ததுடன் இதில் எந்த வகையிலும் இராணுவமோ அல்லது பொலிசாரோ தலையிடக் கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.
அன்று திரு. சிவகுதாசன் மாஸ்ரர் இவ்வாறான ஒரு பூமி தானத்தை எங்கள் ஊருக்கு வழங்கி இருக்காவிட்டால் இந்த மண் இன்று படையினர் வசமாகியிருக்கும்.
தனது சொத்துக்களை மட்டுமல்லாது பிறருடைய சொத்துக்களையும் அபகரித்து கள்ளத்தனம் செய்கின்ற சில மனிதர்கள் மத்தியில் அவர் தன்னலம் கருதாத ஒரு வள்ளலாக எங்களுடைய வல்வெட்டித்துறை மண்ணில் பெயர் பதித்து நிற்கின்றார்.
அவரது கல்வி, சமூகப் பணிக்கும், வள்ளல் தன்மைக்கும், மண்ணின் பற்றுக்கும் தலைசாய்த்து புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.
வீரத்தின் விளைநிலமாக விளங்கும் தீருவில் புனித பூமியின் பெயருடன் அவரது பெயரும் என்றும் வாழும்….!
எங்கள் எல்லோருடைய மனங்களிலும் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவராக வாழ்ந்து சாவடைந்த அமரர் வைத்திலிங்கம் சிவகுகதாசன் அவர்களின் ஆத்மா அவரது குலதெய்வமான வல்வை வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரனின் பாதார விந்தங்களை அடைந்து நித்திய இளைப்பாறலை அடையவேண்டுமென்று பிரார்த்திக் கின்றோம்…..
அன்னாரை இழந்து துயருறும் அவரது மகள், மருமகன், மகன், மருமகள், பேரப்பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்….!
ஓம் சாந்தி…..சாந்நி….சாந்தி….!
-வல்வை ந அனந்தராஜ்